வேலூர்: சாலையில் வந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்ற நபர் கடி வாங்கிய சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி பாலூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே மலைப்பாம்பு ஒன்று திடீரென புகுந்துள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பாலூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னார்வமாக மலைப்பாம்பை பிடிக்க முயன்றுள்ளார்.சாமர்த்தியமாக மலைப்பாம்பை பிடித்த சீனிவாசன், அதனை சாக்கில் போட முயன்றுள்ளார். அப்போது, நழுவிக்கொண்டு கீழே விழுந்த மலைப்பாம்பு, சீனிவாசன் கையில் கடித்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக சீனிவாசனை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.மேலும், வனத்துறையினர் வருவதற்கு முன்னர், சீனிவாசன் பாம்பை பிடிக்க முயன்று கடி வாங்கியதால், இதுபோன்று வன விலங்குகளை கையாளும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது எனவும், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.