ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் செங்குத்தாக திறக்கும் புதிய பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்பாலம், ரயில்வே பொறியியல் துறையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. நவீனமயமாக வடிவமைக்கப்பட்ட மேல் நோக்கி செங்குத்தாக திறக்கும் ரயில் பாலம் சிறிய, பெரிய கப்பல் போக்குவரத்திற்கு பெரிய வகையில் உதவி புரியும்.அந்த வகையில் இன்று கப்பல்கள் கடந்து செல்வதற்காக இந்த புதிய செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கீழே இறக்க முடியாமல் பல மணி நேரமாக ரயில்வே துறை ஊழியர்கள் திணறினர். பின், தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு செங்குத்து தூக்குப்பாலம் கீழே இறக்கப்பட்டது. ஆனால் தண்டவாளத்துடன் தூக்கு பாலம் சமமாக சேராமல் இருந்ததால் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் வழியில் கடந்து செல்லும் விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 1.30 மணி நேரம் தாமதமாகவும், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் வழியாக சென்றன.