திருப்பத்தூர்: கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை தவிர இருக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிரிகரித்து வந்தது. அந்த வகையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் வாணியம்பாடி மற்றும் நியூ டவுன், பெருமாள் பேட்டை, ஜனதாபுரம், செட்டியப்பனூர், புதூர், கச்சேரி சாலை, பேருந்து நிலையம், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்தது.இந்த திடீர் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகளும், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், எதிர்பாராத விதமாக பெய்த மழையால் மாலை நேரத்தில் பணிக்குச் சென்றவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் சாலையில் தேங்கி இருந்த மழைநீரால் அவதியடைந்தனர்.