திருநெல்வேலி: திருநெல்வேலி - பாலக்காடு இடையிலான, பாலருவி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் கடந்த 2018 முதல் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, புனலூர், கொல்லம், திருவல்லா மற்றும் கோட்டயம் வழியாக பயணிக்கிறது.இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (மே 15) முதல் பாலருவி எக்ஸ்பிரஸ், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, நேற்று நள்ளிரவு பாலருவி எக்ஸ்பிரஸ் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கல்லிடைகுறிச்சிக்கு வந்த ரயிலுக்கு ரயில்வே பயணிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, லோகோ பைலட்டுக்கு (இஞ்சின் டிரைவர்) பொன்னாடை போர்த்தி, இனிப்பு கொடுத்தும் வரவேற்றனர்.இதில், 300-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலையம் முன்பு சீரியல் செட், வரவேற்பு தோரணம், பலூன் அலங்கார வளைவுகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு திருவிழா போன்று காட்சியளித்தது.