தருமபுரி: தருமபுரி மாவட்டம் பெரிய குரும்பட்டி மற்றும் மாதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் - ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, கூழ் ஊற்றுதல் மற்றும் 103 ஆம் ஆண்டு தேர் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தோ் விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்நிலை பெயர்த்தல் நேற்று (மே 17) காலை நடைபெற்றது.ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, திருக்கோயிலின் சுற்றுப்புற பகுதி மற்றும் தேர் வலம் வரும் வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இருப்பினும், பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வயல்வெளி பகுதியில் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதில் தேர் சகதியில் சிக்கிக்கொள்ளாமல் திருக்கோயிலை வந்தடைந்தது.இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, தருமபுரி மற்றும் மதிகோண்பாளையம் காவல்துறையினா் மற்றும் வருவாய்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.