நீலகிரி: நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்த மாவட்டமாகும். இங்குள்ள மசினகுடி பகுதியைச் சுற்றியுள்ள சிங்காரா, பொக்காபுரம், மாயாறு போன்ற வனப்பகுதிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் விரும்பி செல்லும் இடமாக உள்ளது. தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று (மே 30) மாயாறு பாலம் அருகே புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை, அப்பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து புலியை பார்த்த சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், “புலியை இது போன்று நேரடியாக, இவ்வளவு தூரத்தில் இதுவரை நாங்கள் கண்டதில்லை. தற்போது புலியை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தனர்.இந்த நிலையில், மாயாறு பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், புலி, யானை, காட்டு எருமை போன்ற வன விலங்குகளை கண்டவுடன் அருகே சென்று வீடியோ பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.