சென்னை: காவல் துணை கண்காணிப்பாளர் பயிற்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர், தனக்கு கிடைத்த பதக்கங்களை தனது குடும்பத்தினருக்கு அணிவித்து அழகு பார்த்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.தமிழ்நாடு காவல் துறையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 24 பேருக்கு, துணை காவல் கண்காணிப்பாளருக்கான பயிற்சி வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தில் வழங்கப்பட்டது. ஓராண்டு பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று (ஜூலை 18) துணை காவல் கண்காணிப்பாளர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, பயிற்சியில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார். இதில் வேல்முருகன் என்பவர் அனைத்து பயிற்சியிலும் சிறப்பாக செயல்பட்டு, ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையையும் வென்றார்.இதன் பின்னர், தனக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை தனது குடும்பத்தினருக்கு அணிவித்து மகிழ்ந்தார். குறிப்பாக, காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட வாளை அவரது மனைவியின் கையில் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அதனை அவரது மனைவி ஆனந்த கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது குறித்து வேல்முருகன் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம் 11 கிலோ எடை குறைந்துள்ளேன். நாங்கள் உயர் அதிகாரி பதவிக்கு சென்றாலும், களத்தில் இறங்கி வேலை செய்வதற்கான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.