மயிலாடுதுறை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி துலாக்கட்டத்தில் புதுமணத் தம்பதியர் மற்றும் சுமங்கலி பெண்கள் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது.இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு விழா. விவசாயத்தை செழிக்க வைக்கும் காவிரி அன்னையை வரவேற்கும் விதமாக, காவிரி பாயும் அனைத்து பகுதிகளிலும் ஆடி மாதம் 18 ஆம் நாளான இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி துலாக்கட்டம் படித்துறையில், காமாட்சி விளக்கில் தீபமேற்றி, தலைவாழை இலை வைத்து காப்பரிசி, கண்ணாடி வளையல், தாலி கயிறு, மாவிளக்கு, மஞ்சள் குங்குமம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு ஏராளமான சுமங்கலிப் பெண்கள் வழிபாடு நடத்தினர்.இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் பொதுமக்களின் நம்பிக்கை. ஆகையால், காவிரி துலாக்கட்டத்தில் உள்ள இரண்டு கரைகளிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்களும் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.