திருச்சி: இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு விழா. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி இவ்விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரைக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.தலைவாழை இலைபோட்டு காவிரி தாய்க்கு காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வைத்து படையலிட்டனர். மேலும், கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர். புதுமண தம்பதியினர் பூஜை செய்து புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர். அதேபோல், திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் காவிரி தாயை நினைத்து வழிபாடு செய்தால் மகிழ்ச்சிகரமான திருமண வழக்கை அமையும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி, ஓடத்துறை, படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், பொதுமக்கள் யாரும் படிக்கட்டில் இறங்காத வண்ணம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.