தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சின்ன சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் .தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மேகமலை வனப்பகுதியில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சின்ன சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் நீர்வரத்து குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மழை நின்று நீர்வரத்து சீரானால் மட்டுமே சின்ன சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.