தஞ்சாவூர்: தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருப்பது ஆடிப்பெருக்கு விழா. அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பெருக்கு விழா தஞ்சாவூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காவிரி நீர் இருகரைகளை தொட்டபடி வெள்ளமென சீறி பாய்ந்தோடி வருவதால் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவிரி, அரசலாற்றங்கரைகளில் ஏராளமான பக்தர்கள் ஆடிப்பெருக்கு பூஜை செய்தனர்.அதனால், பாலக்கரை டபீர் படித்துறை, பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சோலையப்பன் தெரு ராஜேந்திரன் படித்துறை, அண்ணலக்ரஹாரம் படித்துறை, சுவாமிமலை படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.வாழையிலை போட்டு, விளக்கேற்றி வைத்து, பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், அவல், பொட்டுக்கடலை, சர்க்கரை, மஞ்சள் குங்குமம், மஞ்சள் நூல் கயிறு, மாங்கல்ய கயிறு, காதோலை, ஊறவைத்த அரிசி, எள்ளு, வெல்லம் கலந்த காப்பரிசி, மங்கலப் பொருட்களான மஞ்சள் நூல், தாலிக் கயிறு, மஞ்சள் கிழங்கு, சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்தனர். இந்த பூஜை செய்வதால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எனவும் ஐதீகம் உள்ளது. மேலும் சுமங்கலி பெண்கள் வீட்டின் பெரியவர்கள் முன்னிலையில் புதிதாக தாலிப்பெருக்கி அணிந்து கொண்டும், தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.