வேலூர்: ஆடிப் பூர திருவிழாவையொட்டி கெங்கையம்மனுக்கு 2 லட்சம் வளையல்களை கொண்டு அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. இதில், 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோபாலபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நேற்று இரவு கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு வண்ணமயமான இரண்டு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு, ஸ்ரீ மகாலட்சுமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பூசி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, தீபாராதனை போன்ற வைபவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயிலின் சரசு மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் பச்சை கற்பூரம் உள்ளிட்ட சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிறைந்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாக்கு வருகை தந்த சாந்தி என்ற பக்தர் கூறுகையில் "ஆடிப்பூர விழாவுக்காக ஆண்டுதோறும் காத்திருக்கிறோம். இந்த ஆண்டு இரண்டரை மணி நேரம் கோயில் வரிசையில் நின்றும் தரிசனம் செய்தேன். இது மாதிரி அலங்காரம் பார்த்ததேயில்லை. இரண்டு லட்சம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்திருப்பது உண்மையிலேயே பக்தியின் உச்சம் தான்" என்று தெரிவித்தார்.