வேலூர்: வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பகுதியில் வசித்து வருபவர் சரண். இவர் பழைய காட்பாடி பஜனை கோவில் தெரு அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சொந்தமாக யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 வகை இரு சக்கர வாகனம் ஒன்று உள்ளது. இவர் பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது வீட்டின் முற்றத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் நேற்று இரவும் தனது யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 வகை இரு சக்கர வாகனத்தை வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.இந்நிலையில் அவர் இன்று காலையில் எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது வீட்டு முற்றத்தில் நின்றிருந்த அவரது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் இரண்டு பேர் முகக் கவசம் அணிந்து வந்து, திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன