புதுக்கோட்டை: புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மனுதாரர், கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தாலுகா அக்கச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவரது பெற்றோர் கந்தர்வக்கோட்டை பெரிய கடைவீதி பகுதியில் பல்வேறு ஆண்டுகளாக தேங்காய் கடை நடத்தி வருகின்றனர்.இந்த கடை ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளதாக கூறி வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அகற்ற சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட கடை ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் இல்லை என தெரிவித்து கடையை அகற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அன்று இரவே கடையில் இருந்த தேங்காய் மற்றும் மற்ற பொருட்கள் திருடு போயின. இது குறித்து சந்தேகமடைந்த முருகானந்தம், அந்த பகுதியைச் சேர்ந்த அய்யாசெந்தில் என்பவரின் தூண்டுதலின்பேரில் அவரது தம்பி இளங்கோ மற்றும் அண்ணன் மகன் அருண் ஆகியோர் கடையில் இருந்த தேங்காய் மற்றும் பொருட்களை திருடிச் சென்றதாக கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த முருகானந்தம் கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு குடும்பத்தினருடன் உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.