தஞ்சாவூர்: கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,00,500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நீர் மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18,000 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 82,000 கன அடியும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியும் நீரும் வெளியேற்றப்படுகிறது.இந்த நிலையில், மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட உபரி நீர், தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. தற்போது கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணை கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.