உம்பளச்சேரி, மணப்பாறை, காங்கேயம் உள்ளிட்ட நம்முடைய பாரம்பர்ய மாடுகள், தமிழ்நாட்டின் பெருமித அடையாளம் மட்டுமல்ல, தமிழர்களின் குடும்ப உறவுகளாகவும் திகழ்ந்தன. காரணம், பால் கொடுத்து, உழவு செய்து, பாரம் இழுத்து, நிலத்துக்குச் சத்தான எருவும் கொடுத்து விவசாயம் செழித்தோங்க கடுமையாக உழைத்தன. இதனால் இடுபொருளுக்காகப் பைசா செலவு இல்லாமல் நடந்தது அன்றைய விவசாயம். மாடுகளின் கழிவுகள், சத்துகளை வாரி வழங்கியதால், நிலத்தில் வளம் மிகுந்து, பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்தன. நம் மண்ணின் நாட்டு மாடுகள், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்பத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய திறன்மிக்கவை. இதனால் மருத்துவச் செலவின்றி, திடகாத்திரமாக வளர்ந்தன. இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்திருந்தும்கூட, காலப்போக்கில், அதிக பாலுக்காகக் கலப்பின மாடுகளை வளர்க்கத் தொடங்கினார்கள் நம் விவசாயிகள்.