பாபர் மசூதி இடிப்பு தினம்.. தமிழகத்தில் போலீசார் உஷார் நிலை- வீடியோ

  • 7 years ago
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நெல்லை ரயில் நிலையம், பஸ் நிலையம், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தண்டவளத்தில் சோதனை நடந்து வருகிறது.

நெல்லை சந்திப்பு போலீசார் அனைத்து ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் தூத்துக்குடி ரயில் நிலையம், பேரூந்து நிலையம், வழிபாட்டு தலங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. அனைத்து பயணிகள் மற்றும் பக்தர்கள் சோதனை செய்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது ஒரு பெண் வைத்திருந்த பையில் மெட்டல் டிடெக்டரில் பலத்த சத்தம் வந்ததால் பையை திறந்து பார்த்தனர்.

அதில் அவர் அரிவாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் வீட்டு உபயோகத்திற்காக வாங்கி செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர். இன்று மாலை வரை இந்த பாதுகாப்பு தொடர்ந்து நடக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended