பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி- வீடியோ

  • 6 years ago

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி பலி உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் ரூபிணி இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பண்ணந்தூரைச் சேர்ந்த முனிவேல் என்பவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து மாணவி வீட்டிற்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்திற்கு அந்த மாணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் சென்ற போது மாணவர் முனிவேல் திடீரென்று பிரேக் பிடித்துள்ளார். இதில் மாணவி ரூபிணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு டவுன் பஸ்சின் பின்புற சக்கரத்தில் மாணவி ரூபிணி சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விபத்தில் பலியான மாணவி ரூபிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் விபத்துக்கு காரணமாக மாணவர் முனிவேல் மற்றும் பஸ் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரில் இரவு அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கண்ணன் தலைமையில் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்திட அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended