வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் நமக்குக் கீரைகள் கொடுக்கும் குளிர்ச்சி பெரும் பரிசு. விட்டமின்கள், தாதுக்களின் தொழிற்சாலையாக விளங்கும் கீரை வகைகள், உடலுக்குள் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை. அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப்பசளைக் கீரை, வெயில் காலத்துக்கே உரிய ‘சிறப்பு மருத்துவர்’. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். பசளை, சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை போன்றவற்றை வேனில் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். தூதுவளை, முடக்கறுத்தான், முசுமுசுக்கை போன்ற மிதவெப்பம் கொடுக்கும் ரகங்களைக் குளிர், மழைக்காலங்களில் உணவுகளில் சேர்க்கலாம்.