மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதுதான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது. தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆட்சிமொழிக் குழு ஒன்றை 1957 ஆம் ஆண்டில் அமைத்தது. இக்குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அலுவலகங்களில் விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும் தமிழ் வளர்ச்சித் துறை என்றத் தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது.