சிஎஸ்கே வீரர்கள் தங்கியுள்ள விடுதி, மைதானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

  • 6 years ago
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் சென்னை வந்துள்ள சிஎஸ்கே அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொழுதுபோக்கிற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் போராட்ட நோக்கம் திசை திரும்பி விடும் என்பதால் இதனை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் இதுவரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் ஸ்டேடியத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் ஸ்டேடியத்திற்குள் சென்று காவிரி வாரியத்திற்கு ஆதரவாகவும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் பதாகைகளை காட்ட வேண்டும் என்றும் கருப்புக்கொடி ஏந்தியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் சிலர் ஆலோசனை கூறுகின்றனர். இதனிடையே ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு (கிரவுன் பிளாசா) பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நேற்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியினர், பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் (கிரவுன் பிளாசா ) தங்கவைக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர விடுதியில் கூடுதலாகவே போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தி.நகர் உதவி ஆணையர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் மற்றும் 60 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதே போன்று கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பயிற்சிக்கு செல்லவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Police security beefed up in CSK team halted Chennai hotel and cricket stadium as politicians and organisations were against of IPl match tomorrow at Chennai.