#chithiraitv #’பொறுமையை சோதிக்காதீங்க’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம் |

  • 3 years ago
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் உடலுக்கு கவர்னர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது தவறில்லை என கூறினார். ஹெலிக்காப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இதில் தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

முப்படைகளின் தளபதி உயிரிழப்பு தொடர்பாக தவறாக பேசிய திமுகவைச் சேர்ந்த 300 பேர் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழக காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக இருப்பதாக கடுமையாக சாடினார். தமிழக டிஜிபி, சைக்கிளில் போவதும், செல்பி எடுப்பதையும் பணியாக செய்து வருவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக காவல்துறை டிஜிபியின் கையில் இல்லை எனத் தெரிவித்த அவர், திமுக எனும் கார்ப்ரேட் கம்பெனி அதனை கையில் வைத்திருப்பதாக கூறினார். நேர்மையான டிஜிபியாக இருந்தால், பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பரப்பிய அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப கூற விரும்பவில்லை என கூறிய அண்ணாமலை, எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், பொறுமையை கலைத்துவிடாதீர்கள் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும். சி.ஆர்.பி.சியின் பவர் இந்தியா முழுவதும் இருக்கிறது என்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.