இது ஆசிரியர்களுக்கான தனிப்பட்ட போராட்டமல்ல. அதுமட்டுமல்ல இது ஊதிய உயர்வுக்கான போராட்டமுமல்ல, ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியம் 21 மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. நிலுவையில் இருக்கும் அந்த ஊதியத் தொகையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். அதைக் கேட்பதற்கான உரிமையும், கிடைக்காத பட்சத்தில் போராடி அதைப் பெறுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதைத் தவறு என்று சொல்ல முடியுமா? அதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமிழக அரசிடம், எங்களுக்கு பழைய ஊய்வூதியத் தொகையையே திரும்பத் தாருங்கள், புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட அந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் அவரது மறைவின் பின் அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் படும் போது அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள். இதையொட்டித்தான் 2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் துவங்கியது.