ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட்டுக்கு நோட்டீஸ்!

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள், பொதுமக்கள் என இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை மற்றும் புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் 51வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது. சிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆலை விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை தொடங்கியது என்பன உள்ளிட்ட கேள்விகளை சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குனர் விளக்கம் அளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. மக்களின் போராட்டம் 50வது நாளை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட்டுக்கு ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் எத்தனை சட்டவிரோத செயல்பாடுகள் இருக்கிறதோ தெரியவில்லையே.

TN Pollution control board sends notice to Tuticorin Sipcot for alloted 324 acres of land illegally to Sterlite for the extension, as people's protest is continuing for 51th day.

Recommended