காவிரி மேலாண்மை வாரியம் கெடு இன்றுடன் முடிவடைகிறது

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க செயல் திட்டத்தை 6 வாரங்களில் வகுத்திருக்க வேண்டும். இந்த காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்த காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாக, டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழுவை அமைப்பது தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசுக்குத் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

The six-week deadline, which was set up by the Supreme Court to form the Cauvery Management Board, ends today. The Cauvery Management Board has not yet been announced.

Recommended