கத்தி சாகசத்துடன் டான்ஸ்.. கழுத்து அறுப்பட்டு உயிரிழந்த சிறுவன்-

  • 6 years ago
ஹைதராபாத்தில் நண்பர்களுடன் கத்தி சாகசத்தை டான்ஸ் ஆடிக் கொண்டே புரிந்தபோது கைத்தவறி கத்தி வெட்டியதில் 16 வயது சிறுவன் பலியாகிவிட்டார். ஹைதராபாத் ஷேக்பேட்டையை சேர்ந்தவர் சையது ஹமீது. 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் முகமது ஜூனைத் (20). இவர் கத்தி சாகசம் செய்து வருபவர். ஷேக்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியின்போது கத்தி சாகசத்துக்கு திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது ஜூனைத் கத்தியை வீசி சாகசம் புரிந்து கொண்டிருந்தார்.

அந்த சாகச நிகழ்ச்சியில் ஹமீதும் இருந்த நிலையில் கத்தி தவறுதலாக ஹமீது மீது பட்டது. இதில் கழுத்தில் 2 முதல் 3 செ.மீ. அளவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டியது. பின்னர் ஹமீதின் நிலை படுமோசமாக ஆனதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து 2-ஆவதாக அழைத்து செல்லப்பட்ட மருத்துவமனையிலும் இதுபோன்று கூறப்பட்டது. இதையடுத்து மூன்றாவதாக ஒரு மருத்துவமனையில் ஹமீது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து ஹமீதின் கூறுகையில், என் மகனை கட்டாயப்படுத்தி கத்தி சாகசம் செய்ய வைத்து கொன்றுவிட்டனர். சாகச நிகழ்ச்சி நடத்தியோர் கூட்டத்தில் இருந்த எனது மூத்த மகனை தாக்கினர். அங்கிருந்தவர்கள் அதை தடுத்தனர். அதன் பின்னரே எனது இளைய மகனை காயப்படுத்தி கொன்றுவிட்டார்கள் என்றார் அவர்.