சசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியீடு...

  • 6 years ago
சசிகலாவின் அனுமதி இல்லாமல் தான் ஜெயலலிதாவின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான வீடியோ வெளியிடப்பட்டதற்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 30 வருடங்களாக ஜெயலலிதாவின் சுக துக்கங்களில் சசிகலா பங்கெடுத்திருக்கிறார். அதிகமான கஷ்ட காலங்களிலும் துக்க சமயத்திலும் ஜெயலலிதாவுடனே இருந்தவர் சசிகலா.அப்படிப்பட்டவரைத் தான் கொலைகாரி, காலை எடுத்தார், கையை எடுத்தார் என்று பல குற்றச்சாட்டுகளை தந்தனர். கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த போது கூட சசிகலா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இந்த வீடியோவை வெளியிடாமல் மவுனமாக இருந்தார்.

சசிகலாவின் மவுனம் மற்றும் கண்ணியத்தை இன்று இழிவு படுத்திவிட்டனர். இப்படிப்பட்ட காரியத்தை செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெற்றிவேல் பேசுவது மேலும் கஷ்டத்தைத் தான் தருகிறது.

இந்த வீடியோவை முதலில் தினகரனிடம் கொடுத்தது நாங்கள் தான், சசிகலா சொல்லி தான் வீடியோவைத் தந்தோம். ஏன் கொடுக்கச் சொன்னார் என்றால் விசாரணைக் கமிஷனிடம் தேவைப்பட்டால் ஒப்படைக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கு வெளியிடக் கூடாது என்று சசிகலா சொல்லி இருந்தார்.

டிடிவி. தினகரனை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக சசிகலா சொல்லித் தான் வீடியோ வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. டிடிவி. தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் ஏன் போனது, எதற்காகப் போனது என்பது தான் என்னுடைய கேள்வி.

ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் நீம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரை இனியும்கூட வைத்திருப்பது சரியல்ல, அதிமுகவையும் ஜெயலலிதாவையும், சசிகலாவின் வார்த்தைகளையும் வெற்றிவேல் அசிங்கப்படுத்தி விட்டார்.

Recommended