புகை மூட்டத்தினால் அடுத்தடுத்து மோதிக்கொள்ளும் வாகனங்கள்-வீடியோ

  • 7 years ago
> டெல்லி : டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் புகை மூட்டத்தின் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
>
> டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியின் காற்றில் உள்ள மாசின் அளவு அதிக அளவு இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
>
> இன்று அதிகாலை 6 மணியளவில் டெல்லி சாலைகளில் பனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக புகை மூட்டம் நிலவியது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனிப்புகை நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
>
> சாலைகள் சரியாகத் தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். இன்று அதிகாலை டெல்லி - ஆக்ரா சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பனிப்புகையால் மூடப்பட்டது. நொய்டா அருகே இருக்கும் தன்கவுர் என்கிற இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி நடப்பதால், சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.
>
> அதையும் தாண்டி அங்கு நிலவிய காற்று மாசுபாட்டுடன் கூடிய பனிப்புகையால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் ஆக்ரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஆறு கார்களும், டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த எட்டு கார்களும் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. இடைவெளி இல்லாமல் வேகமாக வந்து வாகனங்கள் மோதுவது காண்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
>
> இதுகுறித்து தன்கவுர் காவல் நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, ‘டெல்லியில் திடீரென ஏற்பட்ட பனிப்புகை நண்பகல் தாண்டியும் விலகாமல் இருக்கிறது. சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்து எச்சரிக்கை விளக்குகள் எரியவிடப்பட்ட போதிலும் வாகனங்கள் பார்வை குறைபாட்டால் வாகனங்கள் மோதி உள்ளன. இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended